*தொடக்கப் பாடல்: (நிற்கவும்)*
இடைவிடா சகாய மாதாவே உமது பிள்ளைகளுக்காக வேண்டிக் கொள்ளும். (மும்முறை)
*தொடக்க செபம்: (முழந்தாளிடவும்)*
குரு: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே…
எல்: ஆமென்.
குரு: மிகவும் பரிசுத்த மரியே, மாசில்லாக் கன்னிகையே, எங்கள் இடைவிடா சகாயமும், அடைக்கலமும் நம்பக்கையுமாக இருப்பவள் நீரே!
எல்: இன்று நாங்கள் அனைவரும் உம்மிடம் வருகிறோம். நீர் எங்களுக்கு அடைந்தருளிய வரங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம். இடைவிடா சகாயத் தாயே, உம்மை நேசிக்கிறோம். எங்கள் அன்பைக் காட்ட உமக்கு எப்போதும் சேவை செய்வோம் என்றும், அனைவரையும் உம்மிடம் கொண்டுவர எங்களால் முடிந்தவற்றைச் செய்வோம் என்றும் வாக்களிக்கிறோம்.
குரு: இடைவிடா சகாயத்தாயே! இறைவனிடம் சக்திவாய்ந்தவளே, எங்களுக்கு இந்த வரங்களைப் பெற்றுத்தாரும்.
எல்: சோதனைகளை வெல்லும் பலத்தையும், இயேசு கிறிஸ்துவிடம் தூய்மையான அன்பையும், நல்ல மரணத்தையும் அடைந்து தாரும். உம்மோடும் உமது திருக்குமாரனோடும் என்றென்றும் வாழ அருள் புரியும்.
குரு: இடைவிடா சகாயத் தாயே!
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
குரு: ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவே, உமது திருத்தாயாகிய மரியன்னையின் சொல்லிற்கு இணங்கி, கலிலேயாவின் கானாவூரில் தண்ணீரைத் திராட்சை இரசமாக்கினீரே. எங்கள் தாயாகிய சகாய அன்னையின் மகிமையை போற்றிப் புகழ இங்கு கூடியிருப்பவர்களின் மன்றாட்டுக்களுக்கு செவி சாய்த்தருளும். எங்கள் மனமார்ந்த நன்றியை ஏற்றுக் கொண்டு, எங்கள் விண்ணப்பங்களைக் கேட்டு அருள் புரிவீராக.
எல்: ஓ இடைவிடாத சகாயத் தாயே! சக்தி வாய்ந்த உமது திருப்பெயரைக் கூவி அழைக்கிறோம். வாழ்வோரின் பாதுகாவலும், மரிப்போரின் மீட்புமாயிருப்பவள் நீரே. உமது திருப்பெயர் எங்கள் நாவில் என்றும் ஒலிப்பதாக. முக்கியமாக சோதனை நேரத்திலும், மரண வேளையிலும் உமது திருப்பெயரைக் கூவி அழைப்போமாக. உமது திருப்பெயர் நம்பிக்கையும் சக்தியும் வாய்ந்தது. ஆசீர்வதிக்கப்பட்ட அன்னையே, நாங்கள் உம்மை அழைக்கும் போதெல்லாம் எங்களுக்கு உதவி செய்தருளும். நாங்கள் உமது திருப்பெயரை உச்சரிப்பதோடு திருப்தியடைய மாட்டோம். நீரே எங்கள் இடைவிடா சகாயத் தாய் என்பதை எங்களது தினசரி வாழ்க்கையில் எடுத்துக்காட்டுவோம்.
குரு: நமது சரீரத் தேவைகளுக்காக மன்றாடுவோமாக.
எல்: ஓ இடைவிடா சகாயத் தாயே! மிகுந்த நம்பிக்கையுடன் உம் முன் முழந்தாளிடுகிறோம். எங்கள் தினசரி வாழ்க்கைச் சிக்கல்களில் உமது உதவியைக் கெஞ்சி மன்றாடுகிறோம். துன்ப துயரங்கள் எங்களை வீழ்த்துகின்றன. வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளும் வறுமைப் பிணிகளும் எங்களைத் துன்பத்தில் ஆழ்த்துகின்றன. எப்பக்கமும் துன்பமே நிறைந்து இருக்கின்றது. இரக்கம் நிறைந்த தாயே எங்கள் மேல் இரக்கமாயிரும். எங்கள் தேவைகளை நிறைவேற்றும். எங்கள் துன்பங்களிலிருந்து எங்களை மீட்டருளும். ஆனால் நாங்கள் இன்னும் அதிக காலம் துன்புறுதல் இறைவனின் சித்தமானால், நாங்கள் அவற்றை அன்புடனும் பொறுமையுடனும் ஏற்றுக்கொள்ள சகிப்புத்தன்மையை எங்களுக்கு அளித்தருளும். ஓ! இடைவிடா சகாயத் தாயே இந்த வரங்களையெல்லாம், எங்கள் பேறுபலன்களைக் குறித்து அல்ல ஆனால் உமது அன்பிலும் வல்லமையிலும் நம்பிக்கை வைத்து கெஞ்சி மன்றாடுகிறோம்.
*🙏🏻விண்ணப்பங்கள்: (முழந்தாளிடவும்)🙏🏻*
குரு: எங்கள் திருத்தந்தைக்ககும், ஆயர்களுக்கும், குருக்களுக்கும், நாட்டுத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் அனைவருக்கும் ஞானத்தையும், விவேகத்தையும் அளித்திட வேண்டுமென்று…
எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
குரு: மக்கள் அனைவரும் சமுதாய சமாதானத்திலும் சமய ஒற்றுமையிலும் சகோதரர்களைப் போல் வாழ்க்கை நடத்திட வேண்டுமென்று…
எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
குரு: இந்த நவநாள் பக்தி முயற்சிகளைச் செய்யும் இளைஞர்களும், இளம் பெண்களும் தங்கள் எதிர்கால வாழ்வைத் தெரிந்து கொள்வதில் தூய ஆவியார் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டுமென்று…
எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
குரு: இந்த நவநாள் பக்தர்கள் உமது திருவுளத்தின்படி தங்கள் உடல் நலத்தில் நீடிக்கவும், நோயாளிகள் தங்கள் உடல் நலத்தை திரும்ப அடையவும் வேண்டுமென்று…
எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
குரு: மரித்த நவநாள் பக்தர்களுக்கும் மற்ற விசுவாசிகளுக்கும் நித்திய இளைப்பாற்றியைத் தந்தருள வேண்டுமென்று…
எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
குரு: இந்த நவநாளில் முக்கிய கருத்துக்களுக்காகவும் இங்கு கூடியிருக்கும் அனைவருடைய தேவைகளுக்காகவும்…
எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
குரு: மக்கள் அனைவரும் உமது உண்மையின் ஒளியைக் காணவும், உமது அன்பின் ஆர்வத்தை உணரவும் வேண்டுமென்று…
எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
குரு: நமது இடைவிடா சகாயத் தாயிடம் நம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விண்ணப்பங்களையும் மௌனமாக எடுத்துக் கூறுவோம்.
*🙏🏻(சிறிது நேரம் மௌனமாக செபிப்போம்)🙏🏻*
நன்றியறிதல்: (முழந்தாளிடவும்)
குரு: நீர் எங்களுக்கு புதிய அருள் வாழ்வை அளித்ததற்காக, ஆண்டவரே எங்கள் நன்றியறிதலை ஏற்றுக்கொள்ளும்…
எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
குரு: திருச்சபையின் திருவருட்சாதனங்களின் வழியாக நாங்கள் பெற்றுக்கொண்ட எல்லா வரங்களுக்காகவும்…
எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
குரு: இந்த நவநாள் செய்வோர் பெற்றுக்கொண்ட ஆத்மசரீர நன்மைகளுக்காக…
எல்: எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
குரு: நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அடைந்துள்ள உதவிகளுக்காக நமது இடைவிடா சகாயத் தாய்க்கு மௌனமாக நன்றி செலுத்துவோம்.
*🙏🏻(சிறிது நேரம் மௌனமாக நன்றி செலுத்துவோம்)🙏🏻*
*பாடல்: (நிற்கவும்)*
தாயே மாமரி – இன்றுன் சகாயம் தேடினோம் – தாயே மாமரி
உலகமெத்திசையும் மக்கள் போற்றிடும் புகழவும்
உம் அற்புதப் படமுன் வந்து நிற்கும் எங்களை கண் நோக்குவீர்
தாயே மாமரி – இன்றுன் சகாயம் தேடினோம் – தாயே மாமரி...
*நற்செய்தி: (நிற்கவும்)*
🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻
*மறையுரை: (உட்காரவும்)*
குரு: நோயாளிகளுக்கு செபிப்போமாக;
எல்: ஆண்டவரே! உடல் நோயால் வருந்தும் உமது ஊழியரைப் பாரும். நீர் உண்டாக்கிய ஆன்மாக்களுக்கு ஆறுதல் தாரும். நாங்கள் துன்பங்களினால் தூய்மையடைந்து உமது இரக்கத்தினால் விரைவில் குணமடையும்படி அருள்புரிவீராக.எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.🙏🏻
குரு: (வலது கரத்தை நீட்டி) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களைப் பாதுகாக்க உங்கள் நடுவிலும், உங்களைக் காப்பாற்ற உங்களுக்குள்ளும், உங்களுக்கு வழிகாட்ட உங்களுக்கு முன்னும், உங்களுக்கு காவலாயிருக்க உங்களுக்கு பின்னும், உங்களை ஆசீர்வதிக்க உங்கள் மேலும் இருப்பாராக.
குரு: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே…
எல்: ஆமென்.🙏🏻
*குழுவினர் விசுவாச அறிக்கை: (முழந்தாளிடவும்)*
குரு: இங்கே கூடியிருப்பவர்களின் விசுவாச அறிக்கை.
எல்: ஓ இடைவிடா சகாயத் தாயே! நீர் அருள் நிறைந்தவள், தாராள குணமும் உடையவள். இறைவன் எங்களுக்கு அளிக்கும் வரங்கள் அனைத்தையும் பகிர்ந்தளிப்பவள் நீரே. பாவிகளின் நம்பிக்கை நீரே. அன்புள்ள அன்னையே உம்மை நோக்கி திரும்பும் எம்மிடம் வாரும். உமது கரங்களில் மீட்பு உண்டு. நாங்கள் உமது கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் உமது பிள்ளைகள். அன்பு நிறைந்த அன்னையே எங்களை பாதுகாத்தருளும். ஏனெனில் உமது பாதுகாவலில் இருந்தால் எங்களுக்கு பயமில்லை. கிறிஸ்து நாதரிடமிருந்து எங்களுக்கு பாவ மன்னிப்பை பெற்றுத் தருகிறீர். கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கும் நீர் நரகத்தைவிட சக்தி நிறைந்தவளாயிருக்கிறீர். உமது திருக்குமாரனும் எங்கள் சகோதரருமான கிறிஸ்து நாதர் எங்களைத் தீர்வையிட வரும்போது நீர் எம் அருகில் இருப்பீர் என்று எதிர்பார்க்கிறோம். சோதனை வேளையில் உமது சகாயத்தை தேட அசட்டை செய்வதால், எங்கள் ஆத்துமத்தை இழந்து விடுவோமோ என்று பயப்படுகிறோம். ஓ இடைவிடா சகாயத் தாயே! எங்கள் பாவங்களுக்கு மன்னிப்பையும், கிறிஸ்து நாதரிடம் அன்பையும், இறுதிவரை நிலைத்திருக்கும் வரத்தையும், என்றும் உமது சகாயத்தை நாடும் மனதையும், உமது திருக்குமாரனிடமிருந்து பெற்றுத் தாரும்.
*மகிமை நிறைந்த மங்கள வார்த்தை செபம்: (நிற்கவும்)*
குரு: எக்காலக் கிறிஸ்தவர்களோடும் நாமும் ஒன்றித்து மரியன்னையைப் புகழுவோமாக, வல்லமை மிக்க அவளது பாதுகாப்பில் நம்மை ஒப்படைப்போமாக.
எல்: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே. தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.
குரு: இயேசு கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக.
எல்: இறைவனின் தூய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
குரு: செபிப்போமாக ஓ ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே! உமது தாயாகிய மரியாவை, அவருடைய அற்புதப் படத்தை வணங்கும் எங்களுக்கு என்றும் உதவி செய்யத் தயாராக இருக்கும் மாதாவாகக் கொடுத்திருக்கிறீரே! அவருடைய தாய்க்குரிய சலுகைகளைத் தேடுகிற நாங்கள் உமது மீட்பின் பேறுபலன்களை நித்தியத்துக்கும் அனுபவிக்கும் பாக்கியவான்கள் ஆகும்படி எங்களுக்கு கிருபை செய்தருளும். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி புரியும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்